Related Posts Plugin for WordPress, Blogger...

Tamil Nadu Thowheed Jamaath - Seven Wells Branch Headline Animator

அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து தானும் நல்ல அமல் செய்து தான் ஒரு முஸ்லிம் என்று கூறுபவனை விட அழகிய சொல்லுக்குரியவன் யார் ?

அநீதிக்கு எதிராக ஆர்த்தெழ அணி திரள்வீர் ததஜவின் சென்னை, மதுரை நீதிமன்ற முற்றுகைப் போராட்டத்தில்

Posted on
  • திங்கள், 24 ஜனவரி, 2011
  • by
  • Unknown
  • in
  • துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!

    பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதி மன்றத்தின் கட்ட பஞ்சாயத்து தீர்ப்பை கண்டித்து சமூக அக்கறையாளர்கள் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

    மதசார்பின்மையில் ஒட்டையை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு!-ராஜேந்தர் சச்சார் (ஒய்வுப் பெற்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி)
    இந்தத் தீர்ப்பு பல விஷயங்களைப் பாதிக்கச் செய்திருப்பதுடன், இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையிலேயே ஒட்டையை ஏற்படுத்திவிட்டது. 'பள்ளிவாசலை உடைத்து அழியுங்கள்…!' என்று கூறுவதைப் போல இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு இந்துக்களிடம் வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் முடிவை எட்டுவதற்கு நம்பிக்கை ஒர் அடிப்படையாக இருக்கக்கூடாது.
    இந்த விஷயத்தில் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. நாம் எங்குச் செல்வது? எதை நோக்கிச் செல்வது?  ஒரு குற்றத்தை யாரும் மறந்து விடக்கூடாது. ஒரு குற்றத்தைச் செய்து விட்டு எவரும் தப்பி ஒடவிடாமல் இருப்பதை உறுதி செய்வது தான் நீதிமன்றத்தின் கடமை. முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது அவர்களுக்குள்ள உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. பொதுவான சட்டம் சொலவது என்னவென்றால் ஒரு மகன் தந்தையைக் கொன்றால், தந்தையின் சொத்துக்களைப் பெறும் உரிமை அவனுக்கு இல்லை என்பது தான்! ஆனால் இங்கோ பாபர் பள்ளிவாசலை இடித்த குண்டர்கள் தாங்கள் விரும்பியதைப்  பெற்றிருக்கிறார்கள்.


    இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது-ராஜீவ் தவான் (மூத்த வழக்குறைஞர்)
    பிரச்னையில் சம்பந்தப்பட்ட இரு பிரிவினருக்கும் சரி சமமாகக் கூட நிலம் பிரித்துத் தரப்படவில்லை. இஸ்லாமியருக்குச் சொந்தமான நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு அவர்களுக்கும், இரு பங்கு இந்துக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்குச் சட்ட அடிப்படை எதுவும் கிடையாது. தார்மீக நீதியும் கிடையாது. அது மட்டுமின்றி இத்தீர்ப்பு நிலத்திற்கு உரிமை கோரிய ஒரு பிரிவினருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.
    இந்த தீர்ப்பு ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. இதிலுள்ள தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் வரலாறே தவறாகிவிடும்.  இந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதை ஆப்கானிஸ்தானில் பாமியன் சிலைகளைத் தாலிபான்கள் சிதைத்ததுடன் வெளிநாட்டவர்கள் ஒப்பிடுகின்றனர். பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டதற்கும் முஸ்லிம்களுக்கு உரிய நிலம் அவர்களுக்கு மறுக்கப்படுவதற்கும் நீதி வழங்க மதச்சார்பற்ற நிர்வாகத்தால் முடியவில்லை. இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் கண்ணியத்துடன் நடத்தப்படுவதையும் அவர்களுக்குரிய மரியாதை வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டியது இந்திய ஜனநாயகத்தின் தேவையாகும்.

    நீதி பரிபாலனத்தின் சாதாரண நெறிமுறைக்கு முரணான தீர்ப்பு-அந்தி அர்ஜூனா (மூத்த வழக்குறைஞர், உச்சநீதிமன்றம்)
     பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்படாமல் இருந்திருந்தால் அது நின்ற இடத்தை இப்போது தீர்ப்பில் கூறப்பட்டிருப்பது போல் பிரிப்பதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்குமா? அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மிக தெளிவாக விடப்பட்டுள்ள அம்சம் டிசம்பர் 6, 1992ல் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சண்டித்தனத்தை கண்டிக்காதது தான்.  சர்ச்சைக்குரிய 2.72 ஏக்கர் நிலம் காலியான இடம் என்பது போல் நீதிபதிகள் கருதியுள்ளார்கள்…1992 பள்ளிவாசல் இடிப்பை இந்த தீர்ப்பு நியாயபடுத்தி அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய இரு தரப்புகளில் ஒன்று வழக்கு தொடுக்கும் போது இருந்த நிலையை தனது வசதிக்கேற்ப சட்டத்தை தன் கையில் எடுத்து கொண்டு மாற்றிவிட்டால் (இந்த வழக்கில் இந்துத் தரப்பு), நீதிமன்றம் அந்த வன்செயலுக்கு முன்பிருந்த நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் நீதிமன்றங்களில் நிலவும் சாதாரண நீதி பரிபாலன முறையாகும். ஆனால் அவ்வாறு செய்வது இந்த வழக்கில் உள்ள நிலையை போல் சாத்தியமில்லை என்றால் சட்டத்தை தன் கையில் எடுத்துச் செயல்பட்டவர்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படும் வகையில் எந்த நீதிமன்றமும் செயல்படாது. அலஹாபாத் உயர்நீதிமன்றம் நீதி பரிபாலனத்தின் இந்த அடிப்படையை கூட உணராது தீர்ப்பு அளித்துள்ளது

    தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை இந்த தீர்ப்பு(பி.எஸ். அப்பு (முன்னாள் தலைமைச் செயலாளர் பீகார்)
    மூன்று நீதிபதிகளும் பள்ளிவாசலை முஸ்லிம்கள் பயன்படுத்தினர் என்றும் பள்ளிவாசலுக்கு வெளியில் 100 எட்டு தூரத்தில் உள்ள ராம் சபூட்ரா (திண்ணையை) இந்துக்கள் பயன்படுத்தினர் என்றும் கருதியுள்ளனர். எனவே இந்த விவாகாரத்தில் பள்ளிவாசல் இருந்த இடத்தை முஸ்லிம்களிடமும், ராம் சபூட்ரா மற்றும் சீதா கி ரோசி (சீதையின் சமையல்கட்டு) இருந்த இடத்தை  இந்துக்களிடம் ஒப்படைப்பதும் தான் நியாயமான, சாத்தியமான, நீதியான தீர்ப்பாக இருக்கும். திரேட்டா யூகத்தின் மிகப் பெரும் கதாநாயகனான ராமர், 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நீரில் சமாதியான ராமர், பள்ளிவாசலின் கும்பத்தின் கீழ் தான் பிறந்தார் என்று சொல்வது தர்க்க ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் ஏற்கத் தக்கதாக இல்லை. நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை காத்து சட்டத்தின் கண்ணியத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.

    வரலாற்றுக்கு அவமானம் கற்பிக்கும் தீர்ப்பு-டி.என்.ஜா (வரலாற்றாசிரியர்)
    வரலாற்று சான்றுகளை புறந்தள்ளும் வகையில் நம்பிக்கைகளை அனுமதிக்க கூடாது. என்ன நடந்துள்ளது என்றால் நம்பிக்கை பகுத்தறிவை வென்று விட்டதாக தோன்றுகிறது. வரலாற்றை ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நம்பிக்கை. இந்தத் தீர்ப்பு உண்மைக்கும், வரலாற்றுச் சான்றுகளுக்கும், வரலாறு எழுதியலுக்கும் இழைக்கப்பட்டுள்ள ஒரு அவமானம். தலைநகர் டெல்லியில் அனுமான் கோயில்களின் எண்ணிக்கை திடுதிடுப்பென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உரிமை இல்லாத நிலங்களில் கட்டப்படும் இந்த எண்ணற்ற அனுமன் கோயில்களால் எழும் பிரச்னைகளையும் ராமர் கோயில் பிரச்சினையோடு சேர்த்துத் தீர்க்கும்  பொறுப்புக்கு அரசம் நீதிமன்றங்களும் எதிர்காலத்தில் ஆளாகப் போகின்றன.

    ஜனநாயகத்திற்கான தகுதிகளை இழந்து நிற்கிறோம்-நானி பால்கிவாலா
    (பாபரி பள்ளிவாசல் இருந்த இடத்தில் ராமர் பிறந்தாரா அங்கிருந்த கோயில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் 1994ல் நரசிம்மராவ் அரசு கருத்துக் கேட்டப் போது எழுதியது)
    நம்பிக்கைகள், வரலாறு, புராணம் மற்றும் உடனடி அரசியல் பிரச்சினைகளில் முடிவெடுக்க நீதிமன்றத்தை நாடுவதற்கு விரும்புகின்ற நிலை ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி இது குறித்து மிக்க ஆவலுடன் இருக்க நேர்ந்துள்ள நிலை உருவாகியுள்ளது (ஜனநாயகத்திற்கான) எல்லா தகுதிகளையும், நேர்மையையும் நாம் இழந்து நிற்பதையே காட்டுகிறது.


    முஸ்லிம்களை போல இந்துக்கள் அமைதியாக இருப்பார்களா?-குல்தீப் நய்யார் (அரசியல் விமர்சகர்)
    பாப்ரி பள்ளிவாசல் தீர்ப்புக்குப் பிறகு நாட்டில் சாந்தியும், சமாதானமும் நிலவுகிறது என்பதில் சந்தேகமே இல்லை. எங்கும் எவ்வித அசம்பாவிதமும் நிகழவில்லை. இதன் பெருமை  முழுக்க முஸ்லிம்களுக்கே போய் சேரும். இதற்காக பாராட்டப்பட வேண்டியவர்களும் அவர்களே. அதற்குக் காரணம் உள்ளது.
    பொதுவாக, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் எண்ணியபோதும், நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், அத்தீர்ப்பில் திருப்தி அடையாவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அந்த வாக்குறுதியை அவர்கள் சரியாகவே நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில், இப்போது மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
    ஒருவேளை, இத்தீர்ப்பு இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக வந்திருக்குமானால் என்ன நடந்திருக்கும் என்பதை சற்று ஊகித்துப் பாருங்கள். அவர்கள் முஸ்லிம்களைப் போல் அமைதியாக இருந்திருப்பார்களா? தீர்ப்பு அவர்களுக்கு முழு அளவில் சாதகமாக இல்லாதிருந்தும்கூட தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கூப்பாடு போடுகிறார்கள். எனவே, இத்தீர்ப்பை அவர்கள் தன்னடக்கத்தோடு ஏற்றுக்கொண்டனர் என்றோ, அதனால் முஸ்லிம்களின் அச்சம் குறைக்கப்பட்டிருக்கிறது என்றோ கருதுவதற்கு இடமில்லை. தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் இரு தரப்பினரும் கையாண்ட அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது என்பதை அனைவரும் அறிவர்.
    சிறுபான்மை சமூகத்தினர், சட்டத்தை மதித்து, அதற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறும் போது பெரும்பான்மை இந்து சமுதாயம் அப்படி ஏதும் உறுதி கூற முன்வரவில்லை என்பது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கது. 1992ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும்.

    தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது-ரொமீலா தாப்பர் (வரலாற்று ஆசிரியர்)
    இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் எந்த ஒரு குழுவும் தங்கள் கடவுள் இந்த இடத்தில் பிறந்தார் என்று கூறி தாங்கள் ஒரு பெரும் மதநம்பிக்கையாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு (அதாவது ராமர் பிறந்த இடம் குறித்து சங்பரிவார் ஒட்டுமொத்த ஹிந்துக்களின் பிரதிநிதிகள் என்று சொன்னது போல்) பிறருக்குச் சொந்தமான சொத்துக்களைக் கோருவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இனி தேவையான சொத்துக்களை சுட்டிக்காட்டி சண்டையை ஏற்படுத்துவதற்காக இது போல பல ஜன்மஸ்தானங்கள் உருவாக்கப்படும். திட்டமிட்டு வரலாற்றுச் சின்னம் (பாபரி பள்ளிவாசல்) இடிக்கப்பட்டது கண்டிக்கப்படாத நிலையில் இது போன்ற இடிப்புச் செயல்களை எப்படி தடுத்து நிறுத்த இயலும்?
    வரலாற்றில் நடந்தது நடந்தது தான். அதனை மாற்ற இயலாது. ஆனால் என்ன நடந்தது என்பதை முழுமையாக எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்க இயலும். நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அதில் பாடங்களை கற்க இயலும். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்த காலத்தை மாற்றிவிட இயலாது. இந்த தீர்ப்பு வரலாற்றின் மீதான மரியாதையை சிதைத்துள்ளது. வரலாற்றின் இடத்தில் மதநம்பிக்கையைப் புகுத்தியுள்ளது. இந்த நாட்டின் சட்ட பரிபாலனம் மதநம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமில்லாமல் சான்றுகளின் அடிப்படையிலும் அமைந்துள்ளது என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்படும் போதுதான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.


    அநீதியின் வெளிப்பாடு-ஹர்ஷ் மந்தர் (முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சமூக சேவகர்)
    இந்த தீர்ப்பு நடுநிலையானது என்றும் நேர்மையானது என்றும் சில விமர்சகர்கள் கூறுவது எனக்கு வினோதமாக இருக்கின்றது. நாம் இனி பழையவற்றை மறந்து முன் செல்ல வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நீதிக் கிடைப்பதை அனுபவிக்காத வரையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர இயலாது என்பதை அவர்கள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்த வழக்கு குற்றவியல் ரீதியாக யார் தவறு செய்தார்கள் என்பதை நிர்ணயிக்கும் வழக்கு அல்ல என்பது உண்மை தான். அனால் இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ராமர் கோயில் கட்டும் இயக்கத்தின்; முக்கிய அடிப்படைகள் அனைத்தையும் கொள்கையளவில் ஏற்கும் வகையில் அமைந்துள்ளது….ராமர் கோயில் இயக்கத்தின் போர் பரணியாக 'அந்த இடத்தில் தான் ராமர் கோயில் கட்டுவோம்' என்பதே. நம்பதகாத வரலாறு மற்றும் விசுவாசத்தின் அடிப்படையிலும், ஏமாற்று மற்றும் அடக்குமுறையின் அடிப்படையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இந்த தீர்ப்பின் மூலம் இந்தியாவின் மதசார்பற்ற அரசியல் சாசனச் சட்டத்திற்கு சவால் விட்டு நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்த, அச்சத்தையும் வெறுப்பையும் விதைத்த ஒரு இயக்கம் வெற்றிப் பெற்றுள்ளது.

    துளசிதாசர் கண்டுபிடிக்காததை லக்னோ நீதிமன்றம் கண்டுபிடித்திருக்கின்றது!-சித்தார்த் வரதராஜன் (தி ஹிந்து நாளிதழின் துணை ஆசிரியர்)
    16வது நூற்றாண்டில் அயோத்தியில் தான் துளசிதாசர் ராம் சரித் மனாஸ் நூலை எழுதினார். எனினும் அதில் ராமர் பிறந்த இடம் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. ஆனால் அதன் பின் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து இப்போது ராமர் பிறந்த இடத்தை லக்னோ நீதிமன்றம் இவ்வளவு துல்லியமாக கண்டுபிடித்திருக்கின்றது!
    இந்தியாவில் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அனைத்து வகையான நம்பிக்கைகளும் இருக்கலாம். ஆனால் சட்டத்தில் எது தவறு எது சரி என்பதைத் தீர்மானிப்பதற்கான நடுவராக அந்த நம்பிக்கை மாறிவிடக்கூடாது. அதே போல், வரலாற்றுத் தவறுகளைத் திருத்துவதும், நீதி வழங்குவதற்கான அடிப்படையாக இருக்கக்கூடாது.



    இன்ஷா அல்லாஹ், அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்தும், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை மறுவிசாரணைக்கு உட்படுத்த கோரியும், ஜனவரி 4, 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும், மதுரையிலும் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் ,இன்னமும் 28  நாட்களே உள்ளன. குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வாருங்கள் என அன்புடன் அழைக்கிறது, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்.

                                               

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக

    உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்

    Related Posts Plugin for WordPress, Blogger...
     
    Copyright (c) 2011 Designed byDezMatix
    Other Links : TNTJ NEWS PORTAL, Online PJ,