நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழித் தொகுக்குப்புக்களில் ஸஹீஹுல் புஹாரி முதலிடத்தில் உள்ளது. உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் நீண்ட நெடுங்காலமாக நம் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்படாத குறையை ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனம் நீக்கியது. தமிழாக்கத்தை நூல் வடிவில் கிடைக்கப் பெறாதவர்கள் பயன்படும் பொருட்டு தமது இணைய தளத்திலும் ரஹ்மத் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. நேயர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது இணைய தளத்திலும் வெளியிடுகிறோம். இதில் பயனடையும் சகோதரர்கள் ரஹ்மத் ட்ரஸ்ட் நிறுவனத்துக்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பிறரது ஆக்கங்களை எடுத்தாளும் போது மாற்றம் செய்யக் கூடாது என்பதால் எவ்வித மாறுதலும் செய்யாமல் வெளியிட்டுள்ளோம்.
அத்தியாயம் : 1
1-வேத அறிவிப்பின் (வஹீ) ஆரம்பம்
முன்னோடி அறிஞரும் நபிமொழி மேதையுமான அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் முஃகீரா அல்புகாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பாடம் : 1
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு துவங்கிற்று?
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்பு (வஹீ) அருளியதைப் போன்றே உமக்கும் நாம் வேத அறிவிப்பு அருளினோம். (4:163)
1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் (நாடு துறத்தல்) அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை, அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
இதை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.
பாடம் : 2
2 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) எப்படி வருகின்றது? என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சில வேளைகளில் மணியோசையைப் போன்று என்னிடம் வேத அறிவிப்பு (வஹீ) வரும். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக்கூடியதாக இருக்கும். மணியோசை முலம் அவர் (-வானவர்) கூறியதை நான் மனனமிட்டுக் கொண்ட நிலையில் அது நிறுத்தப்படும். இன்னும் சில வேளைகளில் வானவர் ஒரு மனிதரைப் போன்று எனக்குக் காட்சியளித்து என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன்என்று பதிலளித்தார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கடுமையான குளிர்வீசும் நாளில் வேத அறிவிப்பு (வஹீ) வருவதை நான் பார்த்துள்ளேன். வேத அறிவிப்பு நின்ற பின் அவர்களது நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்.
பாடம் : 3
3 இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. (எனவே) அவர்கள் ஹிரா குகையில் தனித்திருந்து தம் வீட்டாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வந்தார்கள். அதற்காக (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பி வந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்திய (வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒரு நாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி அவர்களிடம் வந்து, ஓதுவீராக என்றார். நபி (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்று சொன்னார்கள் (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:
வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக! என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே! என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக கட்டித் தழுவினார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை அலக் (அட்டை போன்று ஒட்டிப் பிடித்துத் தொங்கும்) நிலையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி! எனும் இறைவசனங்களை (96:1-5) அவர் ஓதினார்.
(தொடர்ந்து ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) பிறகு (அச்சத்தால்) அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர் களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.
அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்;சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டிய தில்லை) என்று (ஆறுதல்) சொன்னார்கள்.
பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
-வரக்கா அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் (அரபு மற்றும்) எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியி(லிருந்து அரபு மொழியி)ல் எழுதுவார். அவர் கண் பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.-
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் புதல்வர் (முஹம்மத்) இடம் அவர் கூறுவதைக் கேளுங்கள் என்றார்கள். அப்போது வரக்கா நபி (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் சொன்னார்கள்.
(இதைக் கேட்ட) வரக்கா, (நீர் கண்ட) இவர்தாம், (இறைத்தூதர்) மூசாவிடம் இறைவன் அனுப்பிய வானவர் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்த சமயத்தில் நான் திடகாத்திரமான வனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே! என்றார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சமூக) மக்கள் என்னை (நாட்டை விட்டு) வெளியேற்றவா செய்வார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுவப்பணிபரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் இராமல் இறந்து விட்டார். (அந்த முதல் வஹீயுடன்) வேத அறிவிப்பு (சிறிதுகாலம்) நின்றுபோயிற்று.
4 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறனார்கள்:
நான் நடந்துபோய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே,நான் ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமி டையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந்தேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி (என் வீட்டாரிடம்) எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னேன். (அவர்களும் போர்த்தி விட்டார்கள்.) அப்போது அல்லாஹ், போர்த்தியி ருப்பவரே எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத் துங்கள். உங்கள் ஆடைகளை தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியி ருங்கள் எனும் வசனங்களை (74:1-5) அருளினான். பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
இதே ஹதீஸ் மற்ற சில அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. யூனுஸ், மஅமர் (ரஹ்) ஆகியோருடைய அறிவிப்பில் (முந்தைய ஹதீஸில் இடம்பெற்றுள்ள இதயம் படபடக்க என்பதற்கு பதிலாக) கழுத்துச் சதைகள் படபடக்க என வந்துள்ளது.
பாடம் : 4
5 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75:16ஆவது) இறைவசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வஹீ-வேத அறிவிப்பு) அருளப்பெறும் போது (தம்மைத் தாமே) மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள்; தம் உதடுகளை (வேதவசனங்களை மனனமிட வேக வேகமாக) அசைத்துக் கொண்டிருப்பார்கள்.
-அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக்காட்டுகிறேன். (அறிவிப்பாளர்) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் இதழ்களை அசைத்துக்காட்டியதைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக்காட்டுகிறேன் என்றார்கள்.-
அப்போது தான் உயர்ந்தோன் அல்லாஹ், (நபியே!) இந்த வஹீயை அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் எனும் (75: 16-19) வசனங்களை அருளினான்.
அதை (உங்களது மனத்தில்) ஒன்றுசேர்த்து அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப் பாகும் எனும் 75:17ஆவது) வசனத்திற்கு உங்கள் நெஞ்சில் பதியச் செய்வதும் அதை நீங்கள் ஓதும்படி செய்வதும் எமது பொறுப்பாகும் என்று பொருள்.
மேலும், நாம் இதை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள் எனும் (75:18ஆவது) வசனத்திற்கு (நாம் இதை அருளும் போது) மௌனமாக இருந்து செவிதாழ்த்திக் கொண்டிருங்கள்
என்று பொருள்.
பின்னர், இதன் கருத்தை விவரிப்பதும் எமது பொறுப்பேயாகும் எனும் (75:19 ஆவது) வசனத்திற்கு (உங்கள் நாவினால்) அதனை (மக்களுக்கு) நீங்கள் ஓதக்காட்(டி விளக்கமளித்தி)டச் செய்வதும் எமது பொறுப் பாகும் என்று பொருள்.
மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில் அதன் பின்னர் அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும் போது (அவர்கள் ஓதுவதை) செவிதாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர் ஓதியதைப் போன்றே அ(ந்த வசனத்)தை நபி (ஸல்) அவர்களும் ஓதினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.
பாடம் : 5
6 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கின்ற வேளையில் நபியவர்கள் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட அதிகமாக நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.
பாடம் : 6
7 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
என்னிடமும் குறைஷி இறைமறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தது.
குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம். அவரும் அவருடைய ஆட்களும் ஈலியாவில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச) வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.
(பிறகு எங்களைப் பார்த்து,) தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக் கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். நான் நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன் என்று பதிலளித்தேன். ஹெராக்ளியஸ் (தம் அதிகாரிகளிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; (அவருடன் வந்திருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று கூறினார்.
பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் நான் (முஹம்மதைப் பற்றி) இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே அவர் பொய் சொல்கிறார் என்று கூறிவிட வேண்டும் என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.
நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்து விடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர் களைப் பற்றி பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.
பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட முதல் கேள்வி, உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது? என்பதேயாகும். அதற்கு அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறினேன். (பிறகு) அவர், உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி(த் தம்மை நபி என) எப்போதாவது வாதித்ததுண்டா? என்று கேட்டார். நான் இல்லை என்று பதிலளித்தேன். அவருடைய முன் னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.
அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனரா? அல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனரா? என்று கேட்டார். அதற்கு நான், இல்லை; பலவீனர்கள்தாம் (அவரைப் பின்பற்றுகின்றனர்) என்று சொன்னேன். அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக் கொண்டே செல்கின்றார்களா? அல்லது குறைந்து கொண்டே போகின்றார்களா? என்று கேட்டார். நான், இல்லை; அவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர்என்று கூறினேன். அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக் கின்றீர்களா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன்.
அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று கேட்டார். நான் இல்லை; (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னேறாம். இதில் அவர் எப்படி நடந்து கொள்வார் என்று எங்களுக்கத் தெரியாது என்று சொன்னேன். இதைத் தவிர (நபியவர்களை குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அவர், அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா? என்று கேட்டார். நான் ஆம் என்று சொன்னேன். அவர், அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தன? என்று கேட்டார். எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம் என்றேன்.
அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்? என்று கேட்டார். நான் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும்/ எவரையும் இணையாக்காதீர்கள்; உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளை யெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகையை நிறைவேற்றும்படியும்,ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும், சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடகின்றார் என்று சொன்னேன்.
பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப் பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்:
(அபூசுஃப்யானிடம்) கூறிவிடு: நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர், அவர் எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர் என்று பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக் கப்படுகின்றனர்.
நான் உம்மிடம் (இவருக்கு முன்னர்) உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியி ருந்)தால், தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தைப் பின்பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்ற நான் சொல்லியிருப்பேன்.
நான் உம்மிடம் அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால், தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடையவிரும்பும் ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்று நான் கூறியிருப்பேன்.
நான் உம்மிடம் அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)த அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன்.
நான் உம்மிடம் மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனரா? அல்லது பலவீனர்களா (ஒடுக்கப்பட்டவர்களா)? என்று கேட்டேன். அதற்கு நீர் ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்ற பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.
நான் உம்மிடம் அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனரா? அல்லது குறைந்துவருகின்றனரா? என்ற கேட்டேன். அதற்கு நீர் அவர்கள் அதிகரித்தேவருகின்றனர் என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை விவகாரம் அவ்வாறுதான்; (வளர்ந்து கொண்டே) இருக்கும்.
நான் உம்மிடம் அவரது மார்க்த்தில் இணைந்தபின் எவரேனும் தமது (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை இத்தகையதே; அதன் மலர்ச்சி இதயங்களில் கலந்து விடும் போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடைய மாட்டார்).
நான் உம்மிடம் அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரே; அவர்கள் வாக்கு மீற மாட்டார்கள்.
நான் உம்மிடம் அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்? என்று கேட்டேன். அதற்கு நீர் அல்லாஹ்வையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும்/ எவரையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும்,சிலைகளை வணங்க வேண்டாமென்று உங்களுக்குத் தடைவிதிப்பதாகவும், தொழுகை, உண்மை, சுயக் கட்டுப்பாடு ஆகிய வற்றை(க் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடு வதாகவும் நீர் பதிலளித்தீர்.
நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார். இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினத்திருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க பெரு முயற்சி எடுப்பேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரது கால்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவருமாறு ஹெராக்ளியஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, புஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளி யஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள். ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.
இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்); இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஏற்றுக் கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால்,) அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.
வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அஃது யாதெனில்:) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது; அவனுக்கு எதனையும்/ எவரையும் நாம் இணைவைக்கலாகாது; அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் திண்ணமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றவர்கள் (-முஸ்லிம்கள்)தான் என்பதற்கு நீங்கள் சாட்சகளாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்.
ஹெராக்ளியஸ் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி, அந்தக் கடிதத்தை படித்து முடித்த போது அவர் அருகில் (அவரைச் சுற்றிலுமிருந்த மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர் களின்) கூச்சலும் இரைச்சலும் அதிகரித்தது; குரல்கள் உயர்ந்தன. உடனே நாங்கள் (அந்த அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியேற்றப்பட்ட போது நான் என் நண்பர்களிடம் இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (ரோமரின்) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சு கிறாரே! என்று சொன்னேன்.
(அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் ளஸல்ன அவர்களின் அம்மார்க்கம் விரைவில் வெற்றிபெறும் என்று உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாமைப் புகுத்தினான்.
ஈலியா (பைத்துல் முகத்தஸ்) நிர்வாகியும் (மன்னர்) ஹெராக்ளியஸின் நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் ஷாம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார். அவர் அறிவிக்கிறார்:
ஹெராக்ளியஸ் ஈலியா (பைத்துல் முகத்தஸ்) வந்த போது மனசஞ்சலத்துடன் காணப்பட்டார். அப்போது அவருடைய அரசவைப் பிரதானிகளில் சிலர் தங்களின் (கவலை தோய்ந்த) இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலை அளிக்கிறது என்று கூறினார்கள்.
-மன்னர் ஹெராக்ளியஸ், கிரகங்களைப் பார்த்து சோதிடம் சொல்வதில் கைதேர்ந்தவராயி ருந்தார்- (தங்களின் கவலைக்குக் காரணம் என்ன வென்று) அவர்கள் வினவியதற்கு, இன்றிரவு நான் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த போது, விருத்தசேதனர்களின் அரசர் தோன்றிவிட்டதைப் பார்த்தேன் என்று ஹெராக்ளியஸ் கூறிவிட்டு,இந்தத் தலைமுறையினரில் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் (நாங்கள் அறிந்தவரையில்) யூதர்களைத் தவிர வேறுயாரும் விருத்தசேதனம் செய்து கொள்வதில்லை;அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள்; உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக் கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள் என்றார்கள். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை கஸ்ஸான் குலத்தின் (குறுநில) மன்னர், ஹெராக்ளியஸிடம் அனுப்பியிருந்தார்; அம்மனிதர் ஹெராக்ளியஸிடம் அழைத்து வரப்பட்டார். அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்ட ஹெராக்ளியஸ், இவரை அழைத்துச் சென்று இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா? என்று சோதியுங்கள் என்று ஆணையிட்டார். அவ்வாறே அவரைப் பார்வையிட்டனர்; அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாக ஹெராக்ளியஸிடம் கூறினார்கள். மேலும், அந்த மனிதரிடம் ஹெராக்ளியஸ் அரபுக(ளின் பழக்க வழக்கங்க)ள் குறித்து விசாரித்த போது, அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடைய வர்கள்தான் என்று குறிப்பிட்டார். உடனே ஹெராக்ளியஸ், இதோ இந்தத் தலைமுறையினரின் அரசர் தோன்றிவிட்டார்என்று கூறினார்.
பின்னர் (இதுதொடர்பாக ரோமின் தலைநகரான) ரூமியாவில் இருந்த தம் நண்பரும் கல்விகேள்வியில் தமக்கு நிகரான வருமான (ளஃகாத்திர் எனும்) ஒவருக்குக் கடிதம் எழுதிவிட்டு ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகருக்குச் சென்றார். அவர் ஹிம்ஸ் சென்ற டைவதற்குள் நண்பரிடமிருந்து (பதில்) கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், ஹெராக்ளி யஸின் ஊகப்படியே, நபிகளரின் வருகை பற்றியும் அவர் இறைத்தூதர்தாம் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமா புரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் கதவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன. பின்னர் ஹெராக்ளியஸ் (அந்த அவையிலிருந்தவர்கள்) முன்தோன்றி, ரோமானியரே! உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? இந்த இறைத் தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பேசினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடி, கதவுகளை நெருங்கியதும் அவை தாளிடப் பட்டிருக்கக் கண்டனர். அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹெராக்ளியஸ் ளநபி (ஸல்) அவர்கள் மீதுன இந்த மக்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள் என்று நிராசையான போது, அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள் என்று (காவலர்களை நோக்கிச்) சொன்னார். (அவர்கள் திரும்பி வந்ததும்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது (உங்கள் உறுதியை) ஐயமற அறிந்து கொண்டேன் என்று கூறினார். உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்கு சிரம்பணிந்தனர். அவரைக் குறித்து திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர்) ஹெராக்ளியஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது.
- சமுதாய பணி தொடர இறைவினிடம் ப்ரார்த்திப்பிராக !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் விமர்சனகள், இறைவனுக்கு உண்மையாய் இருக்கு வேண்டுகிறோம்