வட்டி என்ற சமுதாயக் கொடுமை. (தொடர் - 02)
வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?
வட்டியைப் பற்றி சரியாக தெளிவு படுத்தாமல் நபியவர்கள் மரணித்தார்களா?
வட்டியைப் பற்றி திருக்குர்ஆன் சொல்லும் செய்திகளை சென்ற தொடரில் பார்த்தோம். வட்டியைப் பற்றி நபி(ஸல்)அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது நோக்குவோம்.
அவ்ன் பின் அபீ ஜுஹைஃபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: குருதி உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை என் தந்தை (அபூஜுஹைஃபா அவர்கள்) விலைக்கு வாங்கினார்கள். (பிறகு, அவருடைய தொழிற் கருவிகளை உடைத்துவிட்டார்கள்). (இது தொடர்பாக) அவர்களிடம் நான் (விளக்கம்) கேட்க, அவர்கள் "நபி (ஸல்) அவர்கள், நாய் விற்ற கிரயத்தையும் இரத்தத்தின் கிரயத்தை (குருதிஉறிஞ்சி எடுப்பதற்கு பெறுகின்ற கூலியை)யும் தடைசெய்தார்கள். வட்டி கொடுப்பதையும் தடை செய்தார்கள்! மேலும், உருவம் வரைபவனைச் சபித்தார்கள்!" என்று பதிலளித்தார்கள். (புகாரி - 2086,2238)
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் வட்டி கொடுப்பதை தடை செய்தார்கள் என்ற விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள் வட்டியை உண்பவன், உண்ணக் கொடுப்பவன், எழுதுபவன், சாட்சிக் கையெழுத்துப் போடும் இருவர் ஆகிய அனைவரையும் நபியவர்கள் சபித்தார்கள்.அவர்கள் அனைவரும் (பாவத்தில்)சமனானவர்கள் என்றும் கூறினார்கள். (முஸ்லிம் - 2995)
வட்டியோடு யாரெல்லாம் சிறு அளவுக்கேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் பாவத்தில் சமனானவர்கள் என்று இஸ்லாம் சொல்வதுடன் அப்படிப்பட்டவர்களை நபியவர்களும் சபிப்பதாக மேற்கண்ட ஹதீஸ் நமக்கு தெளிவுபடுத்துகிறது.
ஒருவன் வட்டி எடுப்பதற்கு யார் யார் எல்லாம் அவனுடன் தொடர்பு படுவார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே வகையான தண்டனைதான் கிடைக்கும் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார்கள்.
பெரும்பாவங்களில் ஒன்று.
அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்) என்று கூறினார்கள்.( புகாரி - 6857)
ஏழு வகையான பெரும்பாவங்களை தவிர்ந்து கொள்ளும்படி சொல்லும் நபியவர்கள் அந்த பெரும்பாவங்களில் ஒன்றாக வட்டியை உண்பதையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.
வட்டியை உண்பது பெரும்பாவம் என்றால் பெரும்பாவம் செய்தவன் நரகம் செல்வான். ஆக வட்டியை உண்பவனுக்கு நேரடியாக நரகம் கிடைக்கும் என்பது மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் செய்தியாகும்.
வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லையா?
நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஆட்சிப் பொருப்பை ஏற்றுக் கொண்டவர்களில் இரண்டாவது கலீஃபாவாக இருந்த உமர்(ரலி)அவர்கள் தமது ஜும்மா உரை ஒன்றில் நபியவர்கள் வட்டியைப் பற்றி தெளிவாக விளக்கம் தரவில்லை என்று சொன்னதாக ஒரு செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடையில் (மிம்பர்) இருந்த படி உரை நிகழ்த்தினார்கள். அப்போது கூறினார்கள்
மது ஐந்து வகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. திராட்சை, பேரீச்சம் பழம், கோதுமை, வாற்கோதுமை மற்றும் தேன் ஆகியனவே அந்தப் பொருட்கள் ஆகும். மது என்பது அறிவுக்குத் திரையிடக் கூடியதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று விஷயங்கள் குறித்துத் தெளிவானதொரு முடிவை நமக்கு எடுத்துரைத்துவிட்டு நம்மைப் பிரிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பியதுண்டு.
1.ஒருவரின் சொத்தில் (அவருக்குப் பெற்றோரோ மக்களோ இல்லாமல் சகோதரன் இருக்கும்போது) அவருடைய பாட்டனாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்கும்?
2.கலாலா என்றால் என்ன?
3.வட்டியின் சில வகைகள் குறித்த சட்டம். (புகாரி - 5588)
சின்ன வட்டி கூடும், வட்டிப் பணத்தை ஏழைகளுக்கு தர்மம் செய்யலாம் போன்ற நரகத்திற்குறிய பத்வாக்களை கொடுக்கும் சிலரும், மத்ஹபு, பிக்கு கிதாபுகளை மார்க்கமாக்கியிருக்கும் சிலரும் வட்டியை ஹழாலாக்குவதற்கு இந்த செய்தியைத் தான் தூக்கிப் பிடிக்கிறார்கள்.
நபியவர்கள் வட்டியைப் பற்றி சரியான ஒரு தெளிவை நமக்குத் தரவில்லை என்று உமர்(ரலி)அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் ஆக நபியவர்கள் சரியாக தெளிவு படுத்தாத ஒன்றுக்கு நாம் சரியாக தீர்ப்பு சொல்ல முடியாது.என்று போலிக் காரணம் கூறி இவர்கள் தப்பித்துவிடப் பார்க்கிறார்கள்.
ஆனால் இவர்களின் இந்தத் தீர்ப்பு மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.
உமர்(ரலி)அவர்களை காப்பாற்றப் போய் மார்க்கத்தைப் பொய்யாக்கும் போக்கை இவர்கள் கையால்கிறார்கள்.
அதாவது வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவான ஒரு முடிவைத் தந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உமர்(ரலி)அவர்கள் கூறியது அவர்களுக்கு வட்டியைப் பற்றி தெரியாத காரணத்தினால் தானே தவிர நபியவர்கள் மார்க்கத்தை தெளிவுபடுத்தாமல் விடவில்லை.
நபிவயவர்கள் வட்டியைப்பற்றி தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது கூறினால் அவர் மார்க்கத்தை குறை கூறிய குற்றத்திற்கு ஆளாகிவிடுவார், குர்ஆனைப் பொய்ப்பிக்கிறார் என்று அர்த்தமாகிவிடும்.
அல்லாஹ் நபியவர்களைப் பார்த்து தனது திருமறைக் குர்ஆனில் மார்க்கம் பூரணப்படுத்தப் பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறான்.
இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.(5:3)
மார்க்கம் முழுமைப் படுத்தப் பட்டுவிட்டது என்பதும் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவுபடுத்தவில்லை என்பதும் இரண்டும் ஒன்றுக்கொன்று முரனானதாகும்.
திருக்குர்ஆன் கூறுவதைப் போல் மார்க்கம் முழுமைப்படுத்தப் பட்டிருந்தால் வட்டியைப் பற்றி கண்டிப்பாக நபியவர்கள் தெளிவுபடுத்தியிருப்பார்கள்.
உமர்(ரலி)அவர்கள் கூறுவதைப் போல் வட்டியைப் பற்றி நபியவர்கள் தெளிவு படுத்தவில்லை என்றிருந்தால் மார்க்கம் பூரனமாகவில்லை என்ற கருத்து வந்துவிடும்.
இந்த இரண்டு கருத்துக்களில் முதல் கருத்துத் தான் ஈமானைப் பாதுகாக்கக்கூடியதும் மார்க்கத்தை தெளிவு படுத்தக் கூடியதுமான கருத்தாக இருக்கிறது அதாவது மார்க்கம் பூரணமானதாகத் தான் இருக்கிறது.உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெறியாமல் இருந்திருக்கிறது.
உமர்(ரலி)அவர்களுக்கு வட்டியைப் பற்றி சரியாகத் தெரியவில்லை என்று சொல்வதற்கு மனதில் இடமில்லாமல், உமர்(ரலி)அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மார்க்கத்தை பொய்ப்பிக்கத் துணிகிறார்கள்.
அப்படியென்றால் உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பித்தார்களா? என்ற ஒரு கேள்வியை எதிர்த் தரப்பார் முன்வைக்கிறார்கள்.
உமர்(ரலி)அவர்கள் மார்க்கத்தை பொய்ப்பிக்கவில்லை, ஆனால் வட்டியைப் பற்றி செய்தி அவருக்குத் தெரியாமல் இருந்திருக்கிறது அவருக்கு வட்டியைப் பற்றிய செய்திகள் தெரியாத காரணத்தினால் அவர் சொன்ன ஒரு கருத்துக்கு நாம் வக்காலத்து வாங்கி நாளை நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடாது.
ஸஹாபாக்களைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டார்கள் அல்லாஹ்வும் அவர்களை ஏற்றுக் கொண்டான். ஆதனால் உமர்(ரலி)பற்றிய தீர்ப்பு இறைவனுக்கே உரியது.நாம் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
ஆனால் நாம் மேற்கண்ட உமர் (ரலி)அவர்களின் கருத்தை எடுத்து செயல்பட முடியாது.செயல்படவும் கூடாது.
ஏன் என்றால் நபியவர்கள் மிகத் தெளிவாக வட்டியைப் பற்றி நமக்கு சொல்லித் தந்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார்கள்.
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் "பர்னீ எனும் (மஞ்சளான, வட்டவடிவமான) உயர்ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் "இது எங்கிருந்து கிடைத்தது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது நபி (ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாஉவைக் கொடுத்து அதில் ஒரு ஸாஉ வாங்கினேன்! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! இனி இவ்வாறு செய்யாதீர்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழத்தை மற்றொரு வியாபாரத்தின் வாயிலாக விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக!" என்றார்கள். (புகாரி - 2312)
வட்டியென்றால் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்கான மிக அழகான ஒரு சம்பவம் நபியவர்கள் இது வட்டியேதான் இது வட்டியேதான் என்று சொல்லிவிட்டு இனிமேல் இவ்வாறு செய்யாதீர் என்று குறிப்பிடுகிறார்கள். இதைவிட வட்டியைப் பற்றி தெளிவு வேண்டுமா என்ன?
நன்றி
RASMIN M.I.Sc